search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் பலி"

    போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
    பாரீஸ்:

    எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.



    இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி, சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சீனிவாசன் (வயது 23). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன், அரியானூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதாவை திருமணம் செய்து கொண்டு அரியானூர் பகுதியில் குடியேறினார். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தினர்.

    தினமும் சீனிவாசன் இங்கிருந்து நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.

    இரவு 11 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அவர், வீட்டிற்கு செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக அதிவேகமாக சென்ற வாகனம் சீனிவாசன் மீது மோதி விட்டு நிற்காகமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனது கணவர் உடலை பார்த்து அனிதா கதறி அழுதார்.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கணினியில் வரிசையாக பார்த்தனர்.

    அதில், சீறி பாய்ந்து செல்லும் அந்த காரையும், அதன் பின்பக்கத்தில் இருக்கும் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து, பதிவு எண்ணை வைத்து போலீசார் அந்த கார் எந்த ஊரை சேர்ந்தது? அதை ஓட்டிய நபர் யார்? என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாரி மீது பைக் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 36). இவர் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் வந்தார்.

    மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர். தாடிக்கொம்பு அருகே உள்ள அழகு சமுத்திரப்பட்டியில் சென்று கொண்டு இருந்தபோது முன்னால் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

    இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மடியிலேயே உயிரை விட்டார். இதைப்பார்த்ததும் அவர் கதறி துடித்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அந்த லாரி நின்றதும் அதன் மீது வேகமாக மோதியதுமே விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் பைக்கை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நம்பியூர் அருகே பிரிந்து சென்ற காதல் மனைவியிடம் விஷம் குடித்துவிட்டதாக கூறிய கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழனி கவுண்டன்பாளையத்தில் வசித்தவர் பிரபாகர் (வயது 30). சொந்த ஊர் நம்பியூர் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியாகும்.

    இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சர்மிளா தேவி என்ற பெண்ணை காலித்தார். பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகருக்கு குடிபழக்கம் இருந்ததாம். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி சர்மிளா தேவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். பிறகு அவரிடம் இனி நான் குடிக்க மாட்டேன் என்று சமாதானம் கூறி அழைத்து வருவாராம்.

    இதே போல் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் வேதனையுடன் காணப்பட்ட பிரபாகர் கடந்த 20-ந் தேதி வீட்டில் மதுவுடன் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார்.

    வி‌ஷம் குடித்த அவர் போனில் மனைவியிடம் தான் வி‌ஷம் குடித்து விட்டதாக கூறினார்.

    உடனே அவரும் உறவினர்களும் ஓடி வந்து வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த பிரபாகரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ஆப்பக்கூடல் அருகே மின்சாரவேலியில் கைபட்டு கணவர் பலியானர், மனைவி படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).

    இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பூனைக் கல் என்ற இடத்தில் உள்ளது. அருகே வனப்பகுதி இருப்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தைசுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

    இன்று காலை சரவணன் மற்றும் அவரது மனைவி சத்யா(36)வும் தோட்டத்துக்குசென்றனர். அப்போது இருவரது கைகளும் தவறுதலாக மின்கம்பியில் பட்டுவிட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே கணவர் சரவணன் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சத்யா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு உமாஸ்ரீ (6) என்ற மகளும், நிருபம்(1) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×